ஞாயிறு, 21 நவம்பர், 2010

வாங்க! எப்படி இருக்கீங்க?

நாம் எதையாவது இழந்துவிட்ட பொழுதுகளில்தான் சிறிது திரும்பிப் பார்க்கிறோம்; எங்கே விட்டோம் அதை என்று. எப்படி விட்டோம் என்று.
என்னைப் போலவே பெரும்பாலோர்க்கும் ஏதாவது உடல் நல இழப்பு ஏற்படும்வரை எதைப்பற்றியும் யோசிப்பதில்லை.
ஐயோ சர்க்கரை நோய் வந்துவிட்டதே, கொலஸ்ட்ரால் ஏறிவிட்டதே என்று புலம்பத் துவங்குகிறோம்.
எனக்கும் அப்படித்தான் நேரிட்டது ஒரு நாள்.
ஒய்வு ஒழிச்சல் இன்றி கம்பியுட்டரே கதி என்று கிடந்த எனக்கு, ஓர் நாள் எப்படி இருக்கிறாய் என்று என் உடல் கேட்டது.
மருத்துவப் பரிசோதனையில் உனக்கு சர்க்கரை நோய் வந்திருக்கிறதப்பா என்றார் மருத்துவர். அதோடு அதிகக் கொழுப்பும் ஏறிவிட்டதாகவும் கூறி மருந்துகளை எழுதிக் கொடுத்தார் அவர்.
எனக்கு வயது 41 .
எனக்கு எக்ஸ்பயரி டேட் அருகில் வந்துவிட்டதாகவே தோன்றியது. அதிர்ச்சியியில் என் மனைவி அழுதாள். எனக்கு இன்னும் வயதாகவில்லையே என்கிற குழப்பம்.  எப்படி நேர்ந்தது எனக்கு? என் வம்சத்தில் எவருக்குமே சர்க்கரை நோய் வந்ததில்லையே..?
புதிய உணவு முறை, புதிய வாழ்கை முறை என ஆரம்பித்தது அந்த ஆண்டு.
2010 ஆம் ஆண்டு எனக்கு நிறைய வாழ்க்கை தத்துவங்களையும் கற்றுக்கொள்ள வைத்தது.  கழுகினைப்போன்றொரு வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தேன். மருந்துகளின்றி பத்து கிலோ வரை உடல் எடை குறைத்தேன். இயற்கை  படைத்த உணவு முறை வாழ்க்கை வாழும் முறை உணர்ந்தேன்.  மூன்றே மாதங்களில் மருத்துவர் என் குருதி ஆய்வு அறிக்கையைப் பார்த்துக் குழம்பிப் போனார். ஏதாவது இன்பெக்ஷன் ஆனாலும் இப்படி நடக்கும் என்றார்.
என் உடலில் கொழுப்பும் சர்க்கரை நோயும் காணாமல் போயிருந்தன.
இது எவ்வாறு நேர்ந்தது?
நிறைய உடல் நலம் நோய்கள் தொடர்பாக படிக்கவும் ஆய்வு செய்யவும் ஆரம்பித்தேன். சில ஆய்வுகளுக்கு என்னையே உட்படுத்திக்கொண்டேன். அதனால் எனக்கு மேலும் சில உடல் இடர்பாடுகள். உலகில் நோய்களுக்கும் மருத்துவ முறைகளுக்கும்  இடையில் மனிதன் எவ்வாறு சிக்கித் தவிக்கிறான் என்பதை என் எண்ணங்களின் வாயிலாக உங்களிடம் சொல்வதற்காகவே எழுத ஆரம்பிக்கிறேன்.
தொடர்ந்து வருக.

ஆமா? நீங்க எப்படி இருக்கீங்க? எல்லோரும் நலம்தானே?